இந்த ஆயுதங்கள் வைத்திருந்தால் - உங்களுக்கான செய்தி
Description
எச்சரிக்கை: உங்களிடம் இந்த ஆயுதங்கள் உள்ளதா? நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்! மீறினால் சிறை தண்டனை நிச்சயம்
காலக்கெடு: டிசம்பர் 7, 2025 (ஞாயிற்றுக்கிழமை) வரை மட்டுமே.
பிரான்ஸ் அரசாங்கம் ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாகச் சிறார்களின் பாதுகாப்பை (Protection des mineurs) உறுதி செய்யும் நோக்கில், சில ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு நாளையோடு (ஞாயிறு) முழு வீச்சில் அமலுக்கு வருகிறது.
எந்தெந்த ஆயுதங்களுக்குத் தடை? கடந்த செப்டம்பர் மாதம் வெளியான அரசாணை எண் 2025-894 (Décret n°2025-894)-ன் படி, 'வகை A1' (Catégorie A1) என்று வகைப்படுத்தப்பட்ட ஆயுதங்களை வாங்குவதோ அல்லது வைத்திருப்பதோ இனி சட்டவிரோதம். இதில் முக்கியமாகத் தடை செய்யப்பட்டவை:
'ஜாம்பி' கத்திகள் (Couteaux Zombie): இவை மிகக் கூர்மையான மற்றும் ஆபத்தான வடிவமைப்பைக் கொண்டவை.
கைக்குத்து இரும்புகள் (Poings américains): குறிப்பாக 1900-ஆம் ஆண்டிற்குப் பின் வடிவமைக்கப்பட்ட, நான்கு விரல்களையும் மூடிப் பாதுகாக்கக்கூடிய வகைகள்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன? இந்த ஆயுதங்களை வைத்திருக்கும் தனிநபர்களோ அல்லது கடைகளோ, அவற்றை டிசம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்குள் (நாளைக்குள்) அருகில் உள்ள காவல் நிலையம் (Commissariat de police) அல்லது 'ஜென்தாமரி' (Gendarmerie) அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தவறினால் என்ன நேரிடும்? இந்தக் காலக்கெடு முடிந்த பிறகு, எவரேனும் இந்தத் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் (Ministère de l'Intérieur) எச்சரித்துள்ளது.
சிறைத்தண்டனை: 5 ஆண்டுகள் (Cinq ans d’emprisonnement) வரை.
அபராதம்: 75,000 யூரோக்கள் (75 000 euros d’amende) வரை.
சாதாரண கத்திகளை எடுத்துச் செல்லலாமா? இல்லை, அதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. சட்ட நெறிமுறைகளின்படி (La jurisprudence), அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களான திருப்புளி (Tournevis), கத்தரிக்கோல் (Ciseau), சமையலறை கத்தி (Couteau de cuisine) அல்லது மடிப்புக்கத்தி (Canif) போன்றவற்றைத் தகுந்த, நியாயமான காரணம் (Motif légitime) இன்றிப் பொதுவெளியில் எடுத்துச் செல்வதும் குற்றமாகும்.
காவல்துறையினர் உங்களைச் சோதனையிடும்போது, நீங்கள் இருக்கும் இடம், நேரம் மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டே நடவடிக்கை எடுப்பார்கள். நியாயமான காரணமின்றி இவற்றை வைத்திருந்தால், ஓர் ஆண்டுச் சிறைத்தண்டனையும், 15,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.
எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களை இன்றே அகற்றிவிடுவது அல்லது ஒப்படைப்பது சாலச்சிறந்தது!